உ.பி. தொடர் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 2 குற்றவாளிகள் 17 ஆண்டுக்கு பிறகு விடுவிப்பு

சுரீந்தர் கோலி (இடது), மொனிந்தர் சிங் பாந்தர்.
சுரீந்தர் கோலி (இடது), மொனிந்தர் சிங் பாந்தர்.
Updated on
1 min read

புதுடெல்லி / அலகாபாத்: உத்தர பிரதேசத்தின் நொய்டாவின் நிதாரியில் கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்ச்சியாக காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த வழக்கில் குற்றவாளிகளான 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவுக்கு அருகே உள்ள நிதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மொனிந்தர் சிங் பாந்தர். இவரது வீட்டில் உதவியாளராக பணிபுரிந்தவர் சுரீந்தர் கோலி.

கடந்த 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கு இடையில் மொனிந்தரின் வீட்டில் தொடர் கொலைகள் நடந்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்தது. மொனிந்தரின் உதவியாளர் கோலி வெளியில் சென்று குழந்தை மற்றும் பெண்களை கடத்தி வந்து வீட்டில் வைத்து அவர்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்து கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வீட்டை ‘‘திகில் வீடு’’ என்றே அங்குள்ள மக்கள் அழைத் துள்ளனர்.

அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வடிகால் பகுதியில் இருந்து காணாமல் போன குழந்தையின் உடல் பாகங்கள், எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், அந்த கொலையாளிகள் இருவரும் பெண்கள், குழந்தைகளை கடத்தி வந்து கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி மறைத்தது தெரியவந்தது.

தொடர் கொலை சம்பவங்களில் ஈடுபட்ட மொனிந்தர், கோலி ஆகியோர் மீது 2007-ல் சிபிஐ 19 வழக்குகளை பதிவு செய்தது.

தனது முதலாளியின் வீட்டில் பல குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் அளித்து கொலை செய்து உறவு கொண்டு, உடலுறுப்புகளை வெட்டி சாப்பிட்டதை சுரீந்தர் கோலி ஒப்புதல் வாக்குமூலமாக அளித்தார். மேலும், 20 வயது பெண்ணை பாலியல் துன்புறுத்தல் அளித்து கொலை செய்த வழக்கிலும், கோலி, மொனிந்தர் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான மேல் விசாரணையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் மொனிந்தர், கோலி ஆகிய இருவரையும் விடுவித்து நேற்று உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையும் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in