

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-ம் நாளான நேற்று காலை மலையப்பர் சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 15-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு கோலாகலமாக தொடங்கியது. முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உற்சவர் மலையப்பர் வைகுண்ட நாதர் அலங்காரத்தில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து 2-ம் நாள் பிரம்மோற்சவ விழாவில், வாசுகியாய் கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில் பத்ரிநாராயணர் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பர் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் வாகன சேவையின் போது பங்கேற்கும் நடனக் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்து வருகின்றன.
குறிப்பாக நேற்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து 411கலைஞர்கள் 15 குழுக்களாக பிரிந்து சிறப்பாக நடனங்கள் ஆடி பக்தர்களை மகிழ்வித்தனர். இதில் கீலு குர்ரம், யக் ஷகானா,பத்ரகாளி நாட்டியம், கோலாட்டம் போன்றவை மிகவும் ரசிக்கத்தக்கவையாக இருந்தன. தொடர்ந்து நேற்றிரவு அன்ன வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் எழுந்தருளி அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.