Published : 29 Jan 2018 09:30 AM
Last Updated : 29 Jan 2018 09:30 AM

ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்றவரை காந்தம்போல் இழுத்துக்கொண்ட எம்ஆர்ஐ இயந்திரம்: மும்பையில் நோயாளியின் உறவினர் பலி

மும்பை மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற ஒருவரை எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் இழுத்துக் கொண்டதில் அவர் உயிரிழந்தார்.

மும்பையில் பிஒய்எல் நாயர் அறக்கட்டளை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட நவீன வசிதிகள் உள்ளன. எம்ஆர்ஐ என்பது கணினியின் உதவியுடன் மனித உடலின் உறுப்புகளை காந்த சக்தி மூலம் படம்பிடித்து காண்பிக்கும் இயந்திரம்.

காந்தத் தன்மை கொண்ட எம்ஆர்ஐ இயந்திரம் உள்ள அறைக்குள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நகைகள், மோதிரம், வளையல், கைக்கடிகாரம், ஊக்கு, பொத்தான் உள்ளிட்ட உலோகங்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயதான ஒரு நோயாளிக்கு நேற்று முன்தினம் மாலை எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ய திட்டமிட்டனர். அப்போது நோயாளிக்கு செயற்கை சுவாசம் பொருத்துவதற்காக ஆக்சிஜன் சிலிண்டரை இயந்திரம் உள்ள அறைக்குள் எடுத்து வருமாறு மருத்துவமனை உதவியாளர் (வார்டு பாய்) நோயாளியின் உறவினரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சிலிண்டரை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்துள்ளார் அந்த நபர். உலோகத்தாலான சிலிண்டரையும் அந்த நபரையும் எம்ஆர்ஐ இயந்திரம் சட்டென இழுத்துக்கொண்டது. அப்போது அந்த இயந்திரத்தில் சிக்கிய நபரை மீட்க உதவியாளரும் மற்ற உறவினரும் போராடினர். ஆனாலும் அந்த நபரின் உடல் முழுவதும் இயந்திரத்துக்குள் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்தார்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரமேஷ் பர்மல் கூறும்போது, “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டாக்டர் சித்தாந்த் ஷா, உதவியாளர்கள் வித்தல் சவாண் மற்றும் சுனிதா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x