

‘ஊழல் புகாரில் சிக்கிய இன்னொரு நீதிபதியை உச்ச நீதிமன்றத்துக்கு கே.ஜி.பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார்’ என்று பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு அடுத்த குற்றச்சாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அசோக் குமாருக்கு பதவி நீட்டிப்பு வழங்கிய விவகாரத்தில் முன்னாள் தலைமை நீதிபதிகள் மீது மார்கண்டேய கட்ஜு புகார் தெரிவித்த ஒரு வாரத்தில் மேலும் ஒரு புகாரை எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து கட்ஜு கூறியதாவது:
கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்த போது, நீதிபதிகள் நியமனக் குழுவில் (கொலீஜியம்) இடம் பெற்றிருந்த நீதிபதி கபாடியாவை நான் சந்தித்தேன். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்க முயற்சி நடப்பதை அறிந்து, அவர் மீது ஊழல் புகார்கள் இருப்பதாக கபாடியாவிடம் தெரிவித்தேன்.
ஆனால் அந்த எச்சரிக்கையை யும் மீறி, அந்த நீதிபதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக ‘கொலீஜியத்தால்’ பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதால் அந்த பரிந்துரை வாபஸ் பெறப்பட்டது.
அவர் மீது பெருமளவில் ஊழல் மற்றும் நில அபகரிப்பு புகார்கள் வெளிவந்ததால், சிக்கிம் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் மீது பதவி பறிப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், அதற்கு முன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இச்சம்பவம் நடந்து ஓராண்டு கழித்து, நீதிபதி கபாடியாவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தேன்.
“ஊழல் புகார் இருப்பதாக நான் எச்சரித்தபோதும் அந்த நீதிபதி பெயரை பரிந்துரை செய்தீர்கள். பின்னர் இதுதொடர் பாக வழக்கறிஞர்கள் பேராட்டம் நடத்தியதால், உச்ச நீதிமன்றத் துக்கு தர்மசங்கடம் ஏற்பட்டு விட்டது” என்று கூறினேன்.
அதற்கு கபாடியா கூறும்போது, “நீங்கள் தெரிவித்த தகவலை தலைமை நீதிபதியிடம் கூறினேன். அவர் மீது வேறு தரப்பில் இருந் தும் புகார்கள் வந்தன. ஆனால் தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன், ‘நான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாக இருக்கும்போதே, எனக்கு அவரைப் பற்றி நன்றாக தெரியும். அவர் மீதான புகார்களில் உண்மை இல்லை’ என்று கூறி, உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்துக்கு பரிந்துரை செய்தார். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை’’ என்றார் என கட்ஜு தெரிவித்துள்ளார்.