

நாட்டின் மதரசாக்களால் தீவிரவாதம் பரவுவதாக உ.பி.யின் மத்திய ஷியா வஃக்பு வாரிய தலைவர் வசீம் ரிஜ்வி சமீபத்தில் விமரிசித்திருந்தார்.
இதற்காக தனக்கு நிழல் உலக தாதாவான தாவூத் இப்ரஹிம் பெயரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முஸ்லிம்களின் ஒரு பிரிவான ஷியா சமூகத்தை சேர்ந்தவர் வசீம் ரிஜ்வி. இவர் சமீப காலமாக, மற்றொரு பிரிவான சன்னி முஸ்லிம்களுக்கு எதிராகவே பேசி வருகிறார். கடந்த ஜனவரி 10-ல் அவர், உ.பி. மதரசாக்களில் தீவிரவாதம் வளர்வதாக விமரிசித்திருந்தார். இதனால் அவற்றை மூடி அரசே எடுத்த நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து மாநில முதல்வர் மற்றும் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனால், அவருக்கு ஷியா பிரிவு தலைவரான கல்பே ஜாவீத் உட்பட பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முஸ்லிம்களின் பழம்பெரும் அமைப்பான ஜாமாத்-இ-உலமா ஹிந்த் சார்பில் ரிஜ்வி மீது மானநஷ்ட ஈட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.20 கோடி கேட்டு ரிஜ்விக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்திற்கு முன்பாக ரிஜ்வி, அயோத்தி விவாத வழக்கில் முஸ்லிம்கள் இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என கூறியது சர்ச்சையானது. பிறகு டெல்லியின் வரலாற்று சின்னமான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடுகாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்தற்கும் கண்டனம் எழுந்தது. இந்தநிலையில், ரிஜ்விக்கு மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ரஹிம் சார்பில் கொலை மிரட்டல் வந்துள்ளது.
இது குறித்து வசீம் ரிஜ்வி புகார் கூறும்போது, ‘எனக்கு நேற்று ஒரு அநாமதோய தொலைபேசி வந்தது. அதில் ஒருவர் தாவூத் இப்ரஹிம் கூறியதன் பெயரில் பேசுவதாகக் கூறி இருந்தார். நான் உடனடியாக முஸ்லிம் மவுலானாக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இல்லையேல் என்னை சுட்டுக் கொல்ல இருப்பதாகவும் மிரட்டல் விடுத்திருந்தார்.’ எனக் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 12, 1993 ஆம் ஆண்டு 260 உயிர்களை பலி வாங்கிய மும்பை வெடிகுண்டு வழக்கில் தேடப்பட்டுவரும் முதல் குற்றவாளி தாவூத் இப்ரஹிம். பாலிவுட் நட்சத்திரங்களையும் மிரட்டி பணம் பறித்ததால் அவர், ’நிழல் உலக தாதா’ என அழைக்கப்பட்டார்.
மும்பை வெடிகுண்டு சம்பவத்திற்கு பின் சவுதி அரேபியாவிற்கு ஓடியவர், அங்கிருந்தும் தப்பி பாகிஸ்தான் அரசிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்தபடி தாவூத் இந்தியாவில் தன் தீவிரவாத நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார். இவர் மீது ரிஜ்வீ அளித்த புகாரை லக்னோவின் நகர காவல்நிலையம் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவக்கப்பட்டுள்ளது.