மேற்கு வங்க பல்கலை. துணை வேந்தர்கள் நியமன விவகாரம் குறித்து ஆலோசனை: முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் | கோப்புப்படம்
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் | கோப்புப்படம்
Updated on
2 min read

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்வது குறித்த கூட்டத்தில் பங்கேற்க ராஜ் பவனுக்கு வருமாறு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடிதம் எழுதி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 31 பல்கலைகழகங்களில் முழு நேர துணைவேந்தர்களின் பதவிகாலம் இந்தாண்டுடன் (2023) நிறைவடைந்தது. இந்தநிலையில் இதில் 11 பல்கலைக்கழகங்களுக்கு மாநில ஆளுநர் இடைக்கால துணைவேந்தர்களை நியமிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் அலுவலகத்துக்கும் மேற்கு வங்க அரசுக்கும் ஒரு இணக்கமில்லாத சூழல் உருவானது. ஆளுநர் போஸ் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டிருப்பதால் அதனைத் தாங்கள் புறக்கணிப்பாதாக மாநில அரசு கூறியது.

இந்நிலையில், அரசால் நடத்தப்படும் பல்கலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால துணைவேந்தர்களின் நியமனத்துக்கு தடைவிதித்துள்ள உச்ச நீதிமன்றம், துணைவேந்தர்கள் நியமனத்தில் உள்ள முட்டுக்கட்டைகளை தீர்க்க முதல்வருடன் அமர்ந்து பேசுமாறு ஆளுநரைக் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ஆளுநர், மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ராஜ்பவன் அதிகாரி ஒருவர் "மாநிலத்தின் பல்வேறு பல்கலையில் துணைவேந்தர்களின் நியமனம் தொடர்பாக ராஜ்பவனில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் அலுவலகத்தில் இருந்து விரைவில் பதில் வரும் என்று ஆளுநர் அலுவலகம் எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? மேற்கு வங்க பல்கலைக்கழகங்களில் இடைக்கால துணைவேந்தர்களை நியமித்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மாநில அரசு தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்யப்பட்ட இடைக்கால துணைவேந்தர்களின் ஊதியம் மீதான தடை தொடரும் என்று தெரிவித்தது.

மேலும், கல்வி நிறுவனங்களின் நலன் மற்றும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை நலன்கருதி முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையே நல்லிணக்கம் தேவை என்று அக்.6-ம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 11 மேற்கு வங்க மாநில பல்கலைக்கழகங்களில் இடைக்காலத் துணைவேந்தர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவில் சட்டவிரோதம் ஏதுமில்லை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஜூன் 28ம் தேதி பிறப்பித்த உத்தரவினை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் கடந்த செப்.27-ம் தேதி அரசு பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் பட்டியலை வழங்குமாறு கேட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும் ஆளுநர் அலுவலகத்துக்கும் இடையில் நிலவும் கருத்து வேறுபாட்டினைக் கருத்தில் கொண்டு கடந்த செப்.15ம் தேதி துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கு ஒரு தேடுதல் குழுவை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்திருந்தது.

முன்னதாக, இதுதொடர்பான சட்டங்களின் படி, பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கு வேந்தருக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in