

பக்சார்: பிஹாரின் பக்சார் மாவட்டத்தில் டெல்லி - காமாக்யா வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு தடம்புரண்டது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 70 பேர் காயம் அடைந்தனர்.
டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நகருக்கு வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. குவாஹாட்டியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள காமாக்யா நகருக்கு இந்த ரயில் 33 மணி நேரம் பயணிக்கிறது.
23 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் நேற்று முன்தினம் காலை 7.40 மணிக்கு டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்நிலையில் பிஹாரின் பக்சார் மாவட்டம், ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 9.53 மணிக்கு இந்த ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 2 ஏசி பெட்டிகள் உட்பட 6 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி தண்டவாளத்துக்கு வெளியே விழுந்தன. மேலும் பல பெட்டிகள் தடம் புரண்டன.
விபத்தின் ஓசை மற்றும் பயணிகளின் அலறல் கேட்டு உள்ளூர் மக்கள் அங்கு ஓடி வந்தனர். ரயில்வே மற்றும் மாநில போலீஸாரும் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் இணைந்து கொண்டனர். இந்த விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்தனர். சுமார் 70 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேற்று காலையில் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இரங்கல் தெரிவித்தார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் “சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முடிவடைந்தன. விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 1,500 பேர் பயணித்தனர். விபத்துக்கு பிறகு 1,006 பயணிகள் நேற்று காலையில் தானாபூர் அழைத்து வரப்பட்டு பிறகு அவர்கள் அங்கிருந்து பிஹார், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் உள்ள சொந்த ஊருக்கு மீட்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர சாலை மார்க்கமாகவும் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பயணிகளின் உறவினர்களுக்காக ரயில்வே சார்பில் ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டன.
விபத்துக்குப் பிறகு அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் டெல்லி - திப்ரூகர் ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ் உட்பட 18 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.