

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அலகு விரைவில் உற்பத்தியைத் தொடங்கும் என மத்திய அரசு மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எரிசக்தித் துறை இணையமைச்சர் பியுஷ் கோயல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: தமிழகத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில், தலா 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரு அலகுகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில் முதல் அலகு, தன் முழு உற்பத்தித் திறனான 1,000 மெகாவாட்டை கடந்த ஜூன் 7-ம் தேதி எட்டியது. 2-வது அலகு மின் உற்பத்தியை மிக விரைவில் தொடங்கும்.
இங்கு உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒதுக்கீடு செய்யப்படாத மின்சாரத்தின் அளவு 300 மெகாவாட் ஆகும்.
தமிழகம் மற்றும் ஒடிஸா வில் தலா 4,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள அல்ட்ரா மெகா மின் திட்டங்கள் (யுஎம்பிபி), தலா ஒன்று அமைப்பதற்கான பரிந்துரை ஏற்கெனவே அளிக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.