

புதுடெல்லி: சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவுக்கு எதிரான பணமோசடி வழக்கில் 4 பேரை அமலாக்கத் துறை நேற்று கைது செய்தது.
அதன்படி, லாவா இண்டர்நேஷனல் மொபைல் நிறுவன எம்டி, சீனாவைச் சேர்ந்த ஒருவர், ஒரு பட்டய கணக்காளர், மற்றொரு நபர் என மொத்தம் 4 பேர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அமலாக்கத் துறை விசாரணைக்கு காவலில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல இந்திய நிறுவனங்கள், சீனாவைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து நடத்திய பணமோசடி வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அமலாக்கத் துறை கடந்தாண்டு ஜூலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டது.அப்போது, இந்தியாவில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக ரூ.62,476 கோடியை விவோ நிறுவனம் சட்ட விரோதமாக சீனாவுக்கு மடைமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.