

மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டரின் விலை உயர்வு ஒரு சதவீத வாடிக்கையாளரை மட்டுமே பாதிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இராக்கில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
இதன் காரணமாக பெட்ரோல் விலை அண்மையில் லிட்டருக்கு ரூ.1.69 உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டரின் விலை கடந்த செவ்வாய்க்கிழமை ரூ.16.50 அதிகரிக்கப்பட்டது. இதன்படி 14.2 கிலோ எடை கொண்ட மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.906-ல் இருந்து ரூ.922.50 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மானியம் இல்லாத சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் ஒரு சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு மானியத்துடன்கூடிய 12 சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.
இதற்கு மேல் பெறும் சிலிண்டர்களுக்கு மானியம் அளிக்கப்படுவது இல்லை. எனவே 99 சதவீத வாடிக்கையாளர்களுக்கு விலைஉயர்வால் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.