Published : 06 Oct 2023 03:49 PM
Last Updated : 06 Oct 2023 03:49 PM

சட்டவிரோதமாக 30 நிமிடங்கள் லாக்-அப்: பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

டெல்லி உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

புதுடெல்லி: குற்றம் ஏதும் செய்யாத நபரை சட்டத்துக்குப் புறம்பாக 30 நிமிடங்கள் வரை காவல் நிலையத்தின் லாக்-அப்பில் அடைத்துவைத்ததற்காக அந்த நபருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு காவல் அதிகாரிகள் இணைந்து அந்த ரூ.50 ஆயிரத்தை பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் பங்கஜ் குமாரை போலீஸார் கையாண்டுள்ள விதம் மிகுந்த வேதனையளிக்கிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து அவரை போலீஸார் அப்படியே காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்று எவ்வித விசாரணையும் இன்றி லாக்-அப்பில் அடைத்துள்ளனர். எவ்வித உரிய காரணமும் தெரிவிக்கப்படாமல் அவர் 30 நிமிடங்கள் லாக் அப்பில் இருந்துள்ளார். அது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை அளித்துள்ளது. அதனாலேயே அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். சட்டவிரோத கைது, காவலை எதிர்த்து அவர் இழப்பீடு கேட்டுள்ளார். அவர் தரப்பில் நியாயம் உள்ளது. அவருக்கு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் இருவர் இணைந்து ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது" என்று தெரிவித்தது.

நடந்தது என்ன? - கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி இரவு 9 மணியளவில் பங்கஜ் குமார் சர்மாவை போலீஸார் கூட்டிச் சென்றனர். அவர் பத்ர்பூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். முன்னதாக, அப்பகுதியில் கிராந்தி என்ற பெண்ணுக்கும் காய்கறி வியாபாரி ஒருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த கிராந்தி என்ற பெண் அப்பகுதியில் இருந்த சர்மாவின் கடைக்கு சென்றுள்ளார். தனக்கு நேர்ந்ததைக் கூறி உதவி கோரியுள்ளார். உடனே, சர்மா போலீஸுக்கு போன் செய்துள்ளார். அவ்வளவே நடந்துள்ளது. இதனையடுத்து அங்கு வந்த போலீஸார் சண்டையில் நேரடியாக தொடர்பு இல்லாத சர்மாவை கைது செய்து லாக்-அப்பில் அடைத்தனர். இதனை எதிர்த்தே சர்மா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின்போது டெல்லி போலீஸ் தரப்பு சர்மா எவ்விதமான எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படாமல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு லாக்-அப்பில் அடைக்கப்பட்டதாகக் ஒப்புக்கொண்டனர். மேலும், சம்பந்தப்பட்ட காவல் துணை ஆய்வாளர் ராஜீவ் கவுதம், துணை ஆய்வாளர் சமீம் கான் மீது விசாரணை நடத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தது. இருப்பினும் நீதிபதி பிரசாத் அதில் சமாதானம் அடையவில்லை.

"காவல் அதிகாரிகளால் மக்கள் நடத்தப்படும் விதத்தில் நீதிமன்றம் வருத்தம் கொள்கிறது. காவலர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. துறை நடவடிக்கை மட்டும் போதாது. இந்த வழக்கின் தன்மையைக் காணும்போது மனுதாரர் லாக்-அப்பில் இருந்த நேரம் குறைவுதான் என்றாலும்கூட மனுதாரரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோய் உள்ளது. இது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21 மீதான அத்துமீறல்.

காவல் துறை இங்கே தனது அதிகாரத்தை வரம்பு மீறி அரசியல் சாசன, அடிப்படை உரிமைகளை அத்துமீறும் அளவுக்கு பயன்படுத்தியுள்ளது. துறை ரீதியான நடவடிக்கை அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்களுக்கு வழங்கும் தண்டனை பிறருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதனால் சம்பந்தப்பட்ட இரண்டு காவல் அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை இருவரும் சமமாக பகிர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்குக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x