ஆந்திராவில் மனைவி, 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தலைமை காவலர் தற்கொலை

ஆந்திராவில் மனைவி, 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தலைமை காவலர் தற்கொலை
Updated on
1 min read

கடப்பா: ஆந்திராவில் தலைமைக் காவலர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி மற்றும் 2 மகள்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம், கடப்பா 2-வது காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் வெங்கடேஸ்வரலு (55). கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார்.

பங்குச் சந்தையில் முதலீடு: இவர் பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருந்தார். இதில் நஷ்டம்ஏற்பட்டதால் கடந்த சிலமாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும், கடன் தொல்லை அதிகரித்ததால் இதுகுறித்து மனைவியிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேஸ்வரலு, நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி விட்டு, அவரது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் சிலவற்றை தனது வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். வீட்டில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அப்போது சத்தம் கேட்டு ஓடி வந்த 2 மகள்களையும் அடுத்தடுத்து சுட்டுக் கொன்றுள்ளார். பிறகு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கடப்பா டிஎஸ்பி ஷரீப் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வீட்டில் வெங்கடேஸ்வரலு எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். மேலும், 4 பேரின் சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக கடப்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேஸ்வரலுவின் இந்த செயலுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in