Published : 26 Dec 2017 12:06 PM
Last Updated : 26 Dec 2017 12:06 PM

குஜராத் முதல்வராக விஜய் ருபானி மீண்டும் பதவியேற்பு- விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

குஜராத்தில் பிரமாண்டமாக நடந்த விழாவில், முதல்வராக விஜய் ருபானி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் என ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.

குஜராத்தில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில், பாஜக 99 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கூட்டணி 80 இடங்களில் வெற்றி பெற்றது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக விஜய் ருபானியும் துணை முதல்வராக நிதின் படேலும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து விஜய் ருபானி தலைமையிலான புதிய பாஜக அரசு இன்று பதவியேற்றது. காந்திநகரில் தலைமைச் செயலக வளாக மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட விஜய் ருபானிக்கு, ஆளுநர் ஓ.பி. கோலி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து நிதின் படேல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். இவர்களை தவிர 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பூபேந்திர சிங், கவுஷிக் படேல் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்ற பலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், அமைச்சர்கள் சிலர் தோல்வியடைந்ததால், அவர்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

 

விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். இதுமட்டுமின்றி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.

 

 

பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும் விழாவில் கலந்து கொண்டார்

 

 

குஜராத் முன்னாள் முதல்வர்கள் கேஷூபாய் படேல், சங்கர்சிங் வகேலா, ஆனந்திபென் படேல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x