Published : 18 Dec 2017 04:41 PM
Last Updated : 18 Dec 2017 04:41 PM

வாரிசு, சாதி அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்கு: தேர்தல் முடிவு குறித்து அமித் ஷா பேட்டி

 குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில், வாரிசு மற்றும் சாதி அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி அடையும் நிலையில் உள்ளது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு அக்கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது:

‘‘குஜராத்தில், 1990-ம் ஆண்டில் இருந்து பாஜக வெற்றியை மட்டுமே சந்தித்து வருகிறது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். சாதியின் அடிப்படையில் மக்களை பிரிக்க நினைத்தவர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது. வாரிசு அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், பல்வேறு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைந்து வருகிறது. பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலுக்கு ஆதரவாகவே அம்மக்கள் வாக்களித்து வருகின்றனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. 10 சதவீத அளவில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன. பாஜகவின் வளர்ச்சி அரசியலில் அம்மாநிலம் இணைந்துள்ளதற்கு எனது வாழ்த்துக்கள்’’ எனக் அமித் ஷா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x