

மும்பை: தமிழ் படைப்புலகின் முன்னணி எழுத்தாளர் அம்பைக்கு இந்த ஆண்டுக்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது (Tata Literature Lifetime Achievement Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய இலக்கியத்தில் நீடித்த மற்றும் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் படைப்பாளிகளை அங்கீகரித்து வழங்கப்படும் விருது இது.
அம்பை எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ சிறுகதைத் தொகுப்புக்காக கடந்த 2021-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. பெண்களைப் பற்றியும் குடும்பத்துக்குள் பெண்களின் இருப்புப் பற்றியும் சிலர் எழுதிக் கடந்த நிலையில் அம்பையும் அதைத்தான் கைகொண்டார். ஆனால், பார்வை வேறு; கோணம் வேறு. சமூகக் கருத்துகள் நிறைந்த எழுத்து என்கிற முத்திரை எதையும் அவர் எழுத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டவோ கோரவோ இல்லை. ஆனால், கதைக்குள்ளும் அதைக் கட்டமைக்கும் சொற்களுக்குள்ளும் அந்த வித்தையை நேர்த்தியாக அவர் செயல்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டது குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது” என அம்பை தெரிவித்துள்ளார். அனிதா தேசாய், மார்க் டுல்லி, அமிதவ் கோஷ், ரஸ்கின் பாண்ட் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோர் இதற்கு முன்னர் டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றுள்ளனர்.
1944-ல் கோவையில் பிறந்தவர் அம்பை. சி.எஸ்.லஷ்மி என்பது தான் அவரது இயற்பெயர். பெங்களூருவில் இளங்கலை பட்டப்படிப்பு, சென்னையில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது மும்பையில் வசித்து வருகிறார். அவரது ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’, ‘காட்டில் ஒரு மான்’, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, ‘சிறகுகள் முறியும்’ போன்ற படைப்புகள் வாழ்க்கையில் பெண்ணுக்கான இடத்தையும் வெளியில் சொல்ல இயலாத மன இயல்புகளையும் ஆழ்ந்த சிரத்தையோடு வெளிப்படுத்தியுள்ளன.