

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 பச்சிளம் குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நான்டெட் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையின் டீன் நேற்று கூறியதாவது: மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆண் குழந்தைகளும் 6 பெண் குழந்தைகளும் இறந்துள்ளன. இதுதவிர 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த 12 பேரில் பெரும்பாலானோர் பாம்புக் கடிக்கு ஆளானவர்கள். இங்கிருந்து ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இங்கு ஊழியர் பற்றாக்குறை உள்ளது. மேலும் மருந்து பற்றாக்குறையும் உள்ளது.
70 முதல் 80 கி.மீ சுற்றளவில் உள்ள ஒரே மருத்துவமனை இதுவாகும். இதனால், தொலைதூரத்தில் இருந்தும் நோயாளிகள் இங்கு வருகின்றனர். சில நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து விடுவதால் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
இதற்கிடையில், ‘‘அரசு மருத்துவமனைகளுக்கு போதிய மருந்துகள் விநியோகம் செய்யப்படவில்லை. 500 நோயாளிகள் வசதி கொண்ட மருத்துவமனையில் 1,200 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என்று எதிக்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.