Published : 02 Dec 2017 09:17 AM
Last Updated : 02 Dec 2017 09:17 AM

முத்தலாக் முறையை தடுப்பதற்கு விரைவில் வருகிறது புதிய சட்டம்: 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடிவு

உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற உள்ளது. இதில், சிறப்பு அம்சமாக முத்தலாக் கூறும் கணவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது.

இந்திய முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இடையே ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கம் இருந்து வந்தது. புனித நூலான குர்ஆனில் குறிப்பிடப்படாத இந்த முறைக்கு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இறுதி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 22-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், முத்தலாக் முறை ரத்து செய்யப்பட்டு அது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இத்துடன் அதை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது. இதை அடுத்து டிசம்பர் 15-ல் தொடங்க உள்ள குளிர்காலக் கூட்டத்தொடரில் அதற்கான சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் இடம்பெறவிருக்கும் அம்சங்கள் குறித்து தற்போது மத்திய சட்ட அமைச்சகத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, ‘சட்டத்துக்கு புறம்பான முறையில் மூன்றுமுறை தொடர்ந்து தலாக் கூறி விவாகரத்து செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும். இதை அவர்கள் வாய்மொழி, கடிதம், இமெயில், கைப்பேசியின் குறுந்தகவல் உட்பட எந்த வகையிலும் அளிக்க முடியாது. இதை மீறி, முத்தலாக் கூறும் முஸ்லிம் ஆண்கள் மீது அளிக்கப்படும் புகாரின் பேரில் செய்யப்படும் கைதிற்கு ஜாமீன் தரப்பட மாட்டாது. இத்துடன், விவாகரத்து பெறும் பெண்களுக்கு முறையான ஜீவனாம்சம் அளிக்கவும், அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பிற்கு பொறுப்பேற்கவும் வசதி செய்யப்பட உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x