

சுரங்க குத்தகையை பெறும் விவகாரத்தில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்க ரூ.6 கோடி லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கோவாவின் முன்னாள் முதல்வர் பிரதாப் சிங் ரானே, அவரது மகன் விஸ்வஜித் ஆகியோர் மீது காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதாப் சிங் ரானே, இப்போது கோவா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். விஸ்வஜித், எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் தாஹெஜ் கனிம நிறுவனத்தின் தலைவர் பாலசந்திர நாயக் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: “இரும்பு, மாங்கனீசு தாது சுரங்கத்தை குத்தகைக்கு எடுப்பதில் பிரதாப் சிங் ரானே இடையூறு செய்தார். எந்தவிதமான பிரச்சினையும் செய்யாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று மிரட்டினார். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரின் மகன் விஸ்வஜித்திடம் ரூ.6 கோடி அளித்தேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலசந்திர நாயக்கின் புகாரின் பேரில், பிரதாப் சிங் ரானே, விஸ்வஜித் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக டி.ஐ.ஜி., கே.கே.வியாஸ் கூறும்போது, “ரானே மற்றும் அவரின் மகன் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். விரைவில், இரு வரையும் அழைத்து விசாரணை நடத்தவுள்ளோம்” என்றார்.
இக்குற்றச்சாட்டை பிரதாப் சிங் ரானே மறுத்துள்ளார். பாலசந்திர நாயக் என்பவர் யாரென்றே தனக்குத் தெரியாது என்றும், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை அவர் சுமத்துகிறார் என்றும் பிரதாப் சிங் ரானே தெரிவித்தார்.