Published : 19 Dec 2017 04:08 PM
Last Updated : 19 Dec 2017 04:08 PM

இமாச்சல் தேர்தல் தோல்வி எதிரொலி: வீர்பத்திர சிங் பதவி விலகல்

இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து அம்மாநில முதல்வர் வீர்பத்திர சிங் பதவி விலகியுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பாஜக 44 இடங்களில் வென்றது. ஆளும் காங்கிரஸ் 21 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறி கொடுத்தது. மற்றவர்கள் 3 இடங்களில் வென்றனர்.

இமாச்சலப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் வீர்பத்திர சிங் பதவி விலகியுள்ளார். மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை இன்று (செவ்வாய்) சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். வீர்பத்திர சிங்கின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர், அடுத்த முதல்வர் பதவியேற்கும் வரை, பொறுப்பு முதல்வராக பதவியில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ராம்பூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த வீர்பத்திர சிங் (வயது 83), அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 8 முறை வென்றுள்ளார். அம்மாநிலத்தில் 4  முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். நீண்டகாலமாக சிம்லா புறநகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்று வந்த வீர்பத்திர சிங் இந்த முறை, தனது மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிட வசதியாக அந்த தொகுதியை விட்டுக்கொடுத்தார்.

இந்தத் தேர்தலில் அர்கி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இமாச்சலப் பிரதேசத்தில் இவரது ஆட்சிக்காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுக்க ஊழல் குற்றச்சாட்டு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வீர்பத்திர சிங் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x