

டெல்லியில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா வீட்டு முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
சதானந்த கவுடா தாக்கல் செய்த பட்ஜெட் ஒன்றுக்கும் உதவாத பட்ஜெட் என அவர்கள் குற்றம்சாட்டினர். தில்லி மாநில காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோரைக் கண்டித்து கோஷம் எழுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள், சமீபத்திய ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
தில்லி காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா இது தொடர்பாக கூறியது:
மோடி அரசின் ரயில்வே பட்ஜெட் ஒன்றுக்கும் உதவாது. புல்லட் ரயில் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு. முதலில் ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். புல்லட் வேகத்தில் பண வீக்கத்தை அதிகரிக்கச் செய்வது தான் இந்த அரசின் சாதனையாக இருக்க போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.