Last Updated : 30 Nov, 2017 09:21 AM

 

Published : 30 Nov 2017 09:21 AM
Last Updated : 30 Nov 2017 09:21 AM

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தொப்பி சின்னத்தை மீண்டும் கோருவோம்: சிறையில் சசிகலாவை சந்தித்தபின் தினகரன் பேட்டி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிடிவி தினகரன் நேற்று சசிகலாவை சந்தித்துப் பேசினார்.

சுமார் 1 மணி நேர சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் 99 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்களுடன்தான் உள்ளனர். என்னிடம் சொல்லிவிட்டே சில எம்பிக்கள் அவர்களுடன் சென்று இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த சசிகலாவுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க ஆர்.கே.நகர் தேர்தல் எங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.

இந்தத் தேர்தலில் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே மட்டுமே நேரடிப் போட்டி நிலவும். மக்கள் விரும்பாத ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இந்தத் தேர்தலில் ஏற்கெனவே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்தில் கேட்டுப்பெறுவோம். துரோகிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தை மேல்முறையீட்டு வழக்கில் வென்று கைப்பற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தினகரனைத் தொடர்ந்து இளவரசியின் மகன் விவேக், மகள் ஷகிலா மற்றும் உறவினர் வெங்கடேஷ் ஆகியோர் சசிகலா, இளவரசியை சந்தித்துப் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x