

உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானி தோல்வியைடைந்தார்.
மாநிலங்களவை உறுப்பினரான அவர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக அமேதி தொகுதிக்கு சென்று, மக்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இந்தத் தொகுதியில் தோல்வியடைந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அமேதி மக்கள், என்னிடம் கொண்டுள்ள எதிர்ப்பார்ப்புகளை நான் நன்கு உணர்கிறேன். அதேசமயம், இந்தத் தொகுதி எம்.பி.யிடம் நீங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும் எனக்கு தெரியும்.
ஓட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதனைத் தடுக்க, அவர்களுக்கான பாதுகாப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்றார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.