Published : 29 Sep 2023 02:32 PM
Last Updated : 29 Sep 2023 02:32 PM

காவிரி பிரச்சினை | சிவராஜ் குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் போராட்டம் - கர்நாடக பந்த் தாக்கம் எப்படி?

போராட்டக் களத்தில் நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன் உள்ளிட்டோர்.

பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்துக்கு கன்னட திரையுலகம் ஆதரவு தெரிவித்துள்ளது. நடிகர் சிவராஜ் குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் திரண்டுள்ளனர். கர்நாடக திரைப்பட வர்த்தக கூட்டமைப்பு அலுவலகம் அருகே கன்னட திரைப் பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முடங்கிய மைசூரு: மைசூருவில் பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடுப்பு, தக்சின் கன்னடா பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. தமிழகத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் கன்னட அமைப்பினர், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.

எல்லையில் போக்குவரத்து முடக்கம்: முழு அடைப்பு காரணமாக் தமிழக - கர்நாடகா இடையேயான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்குச் செல்லும் வாகனங்கள் ஜூஜூவாடி, பண்ணாரி, குரங்கணி எனப் பல பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழக எல்லையை ஒட்டிய பகுதியில் திரண்ட கன்னட அமைப்பினர்

இது ஒருபுறம் இருக்க, கர்நாடகாவில் இறந்துபோன நபரின் ஈமச்சடங்கில் பங்கேற்க முடியாமல், காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் தவித்த உறவினர்களை கர்நாடகாவுக்குள் செல்ல அனுமதியளித்தனர். புளிஞ்சூர் சோதனைச் சாவடி வரை தாளவாடி போலீஸார் அவர்களுடன் சென்று வழி அனுப்பிவைத்தனர். வாசிக்க: கர்நாடகா பந்த் | தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சென்றவர்களை அனுமதித்த போலீஸார்

போராட்டத்தின் மையமான ஃப்ரீடம் பார்க்: பெங்களூருவில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் நடத்துகின்றனர். இதுவரை போராட்டங்கள் அமைதியான முறையிலேயே நடைபெற்று வருகின்றன. ஃப்ரீடம் பார்க் பகுதியில் மட்டுமே போராட்டங்கள் அனுமதிக்கப்படுவதால் அத்தனை போராட்டக்காரர்களும் அங்கேயே குவிகின்றனர். அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு வந்து போராடுபவர்கள் சில நிமிடங்களில் அப்புறப்படுத்தப்பட்டு பத்திரமாக வாகனங்களில் ஏற்றி குறிப்பிட்ட சில இடங்களில் காவலில் வைக்கப்படுகின்றனர். அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

ஃப்ரீடம் பார்க் தவிர்த்து டவுன் ஹால், சேட்டிலைட் பஸ் நிலையம் காந்திநகரில் திறட்ட போராட்டக்காரர்கள் தடுத்து காவலில் எடுக்கப்பட்டனர். அதன்படி கர்நாடக ரக்‌ஷன வேதிகே அமைப்பில் ப்ரவீன் ஷெட்டி, ஆர்டி நகரில் போராட முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

12,500 குறையக்கூடாது: முன்னதாக, இன்று நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை வாரிய அவசரக் கூட்டத்தில், தமிழகத்துக்கு, 12,500 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "எங்களுடைய வாதம் ஒன்றுதான். அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தாலும் சரி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவாக இருந்தாலும் சரி, நாங்கள் கேட்பது தமிழகத்துக்கு 12500 கன அடி தண்ணீர் தேவை. ஆனால், காவிரி ஒழுங்காற்றுக் குழு 5000 கன அடி தண்ணீர் திறக்கத்தான் உத்தரவிட்டது. அந்த தண்ணீர் போதவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து போகின்றன.

எனவே, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும், நாங்கள் 12,500 கன அடி தண்ணீர் திறக்கவே கோரிக்கை வைப்போம். இதுவரையில் காவிரியில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த தண்ணீர் திறப்பு குறுவைக்கு போதுமானது என்று சொல்லமுடியாது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பரவாயில்லை அவ்வளவுதான்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x