வளைகுடா நாடுகளுக்கான விமான கட்டணத்தை ஒழுங்குபடுத்த கோரிய மனு நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுரை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: வளைகுடா நாடுகளுக்கான விமான கட்டணத்தை ஒழுங்கு படுத்தக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தை அணுகஉச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக கேரளாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஏராளமான விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான விமான நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக நீண்ட காலமாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் வளைகுடா நாடுகளுக்கான விமான கட்டணத்தை ஒழுங்குபடுத்தக் கோரி கேரள பிரவாசி கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

"இந்தியா, வளைகுடா நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் விமானங்களில் இந்திய விமான போக்குவரத்து சட்ட விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ரூ.7,000 கட்டணத்துக்கு பதிலாக ரூ.1.5 லட்சம் வரைவிமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

உதாரணமாக கேரளாவின் கொச்சி நகரில் இருந்து துபாய் செல்ல ரூ1,04,738-ம், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் செல்ல ரூ.2,45,829-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள், இதர பயணிகளின் நலன் கருதிவிமான கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்" என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி சந்திரசூட் மறுத்துவிட்டார். விமான கட்டண விவகாரம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். இதன்படி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய கேரள பிரவாசி கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in