ம.பி.யில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ம.பி.யில் 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
Updated on
1 min read

உஜ்ஜைனி: மத்திய பிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தின் உஜ்ஜைனி நகரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்நகர் சாலையில் 12 வயது சிறுமி அரை நிர்வாண கோலத்துடன் வீடு வீடாகச் சென்று உதவி கோரும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு ரத்தம் சொட்ட சொட்ட சென்று ஒவ்வொரு வீடாக கதவை தட்டி உதவி கோரியுள்ளார். ஆனால், சிறுமியை விரட்டியடித்துள்ளனர். இறுதியில் ஆசிரம நிர்வாகிகள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது.

சிறுமியின் உடலில் காணப்பட்ட காயங்கள் தீவிரமாக இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உஜ்ஜைனி காவல் கண் காணிப்பாளர் சச்சின் சர்மா கூறுகையில், “இந்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தந்து உதவலாம்" என்றார்.

சிறுமி உதவி கோரும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ம.பி., மகாராஷ்டிராவில் 2019 மற்றும் 2021-க்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021-ல் மட்டும் 6,462 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி அவற்றில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை சிறார்களுக்கு எதிரான குற்றங்களாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in