Published : 27 Sep 2023 06:38 AM
Last Updated : 27 Sep 2023 06:38 AM

மகளிர் சக்திக்கு அதிகாரமளித்தல் என்பது பிரதமரின் உறுதிப்பாடு

நிர்மலா சீதாராமன், மத்திய நிதி, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்

மகளிருக்கு அரசியல் அதிகாரம் அளிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு முக்கியமான கருவியாகும். இது பிரதமர் நரேந்திர மோடியின் ஊசலாட்டம் இல்லாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. 370-வது சட்டப் பிரிவு ரத்து, முத்தலாக் முறை ஒழிப்பு ஆகியவற்றில் காட்டிய உறுதியை பிரதமர் தற்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாய்ப்பு வழங்கப்பட்டால், இஸ்ரோவில் நமது பெண்கள் சிறந்த விஞ்ஞானிகளாவதை போல், அரசியல் துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.

பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது மத்திய அரசின் கடமை. இதற்காக உஜ்வாலா திட்டம், பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் திட்டம், பேறுகால விடுப்பு அதிகரிப்பு, சிறிய அளவிலான தொழில் பிரிவுகள் மற்றும் சுயவேலை வாய்ப்புக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் போன்றவை சிறந்த உதாரணங்களாகும். பிரதமரின் முத்ரா திட்டத்தில் கடன் பெற்றிருப்போரில் 70% பேர் பெண்கள். இதேபோல, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டப் பயனாளிகளில் 80% பேர் பெண்கள்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் வெற்றியால் ஏராளமான பெண்கள் தங்களின் வீடுகளிலேயே கழிப்பறை வசதியை பெற்றிருக்கிறார்கள். இது அவர்களின் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்துள்ளது. பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் மூலமான வீடுகளில் பெண்கள் கூட்டு உரிமையைப் பெற்றுள்ளனர்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றைக் கொண்ட ஸ்டெம் கல்வியில் பெண்களின் பங்கேற்பு 2014-ம் ஆண்டுக்குப் பின் இருமடங்காகி உள்ளது. சந்திரயான், ககன்யான், செவ்வாய் கோளுக்கான பயணம் உள்ளிட்ட மிக முக்கியமான விண்வெளித் திட்டங்களிலும் பெண்கள் முக்கிய பங்காற்றி உள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் பெண் விமானிகள் இருப்பது மட்டுமின்றி போர் விமானங்களை செலுத்துபவர்களாகவும் பெண்கள் முன்னேறி உள்ளனர். மத்திய ஆயுதப் படைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புகல்விக் கழகத்திலும், ராணுவப் பள்ளிகளிலும் பெண்களை சேர்ப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 லட்சம் பிரதிநிதிகளில் 46% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பதில் பெண்களும், அவர்களுக்கு அதிகாரமளித்தலும் மிகப்பெரிய பங்களிப்பை செய்கின்றன.

புதிய இந்தியாவின் அடையாளமாக அண்மையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தொடக்க விழாவுக்காக நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்த நாடாளுமன்றத்தின் பயண வரலாற்றில் மிக முக்கியமான மசோதாக்களில் ஒன்று தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் வரும் நூற்றாண்டுக்கு சேவை செய்ய வடிவமைக்கப்பட்ட நல்ல தொடக்கமாக அமைந்தது. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் வீடுகளில் முடக்கப்பட்டால், வெற்றியை ஈட்ட முடியாது என்று பிரதமர் மோடி மிகச்சரியாகவே குறிப்பிட்டார்.

உலகளாவிய பொருளாதார சக்தியாக மாறிவரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மகளிருக்கு அதிகாரமளித்தலை மேலும் ஊக்கப்படுத்தும். நமது அரசியலிலும், நிர்வாக நடைமுறையிலும் பெண்களின் பங்களிப்பை மேலும் கூடுதலாக்கும்.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதை அடுத்து, இந்தியா அதிக பிரகாசமும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையையும் கொண்ட நிலையை அடைந்துள்ளது. பெண்கள் பயனாளிகளாக மட்டுமின்றி, தேசத்தின் கட்டமைப்புக்கு தீவிர பங்களிப்பு செய்பவர்களாகவும் மாறவிருக்கிறார்கள்.

இந்தத் தருணத்தில் பஞ்சாயத்துராஜ் முறையில் 33% இடஒதுக்கீட்டை அறிமுகம் செய்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் அரசுக்கு நன்றி சொல்வது முக்கியமானது. இந்த முன்முயற்சி பெண்களின் பங்கேற்பை அதிகரித்ததோடு, அடித்தள நிலையில் 50% வரை பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது பல மாநிலங்களில் நடைமுறைக்கு வந்தது.

மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்பது வெறுமனே அரசியல்பூர்வ உத்தி அல்ல. மாறாக நமது அறநெறிகளில் ஆழப்பதிந்ததாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கோட்பாடு, தேசத்தின் வளர்ச்சி மகளிரின் வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாதது. அரசின் இந்த உறுதிப்பாடு கடந்த 9 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளிலும், முன்முயற்சிகளிலும் பிரதிபலிக்கிறது.

ஓர் அரசியல் கட்சி என்ற முறையில் பாஜக, மகளிர் இடஒதுக்கீட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரதமரும், நமது கட்சியும் அதிகாரமளிக்கப்பட்ட பெண்களை அடையாளம் காட்டியிருக்கின்றனர். அதிகாரமளிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒளிரும் உதாரணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளங்குகிறார். மேலும் நமதுகட்சியின் ஒவ்வொரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.

மகளிருக்கு அதிகாரமளித்தல் என்பதன் பொருள் தேசத்திற்கு அதிகாரமளித்தல் என்பதை நாம் நினைவில் கொள்வது அவசியமாகும். மகளிர் செழிப்புறும் போது, சமூகமும் செழிப்படைகிறது. பாலின தடைகளைத் தகர்த்து தொலைநோக்குப் பார்வை, செயல்திட்டம், உறுதிப்பாடு ஆகியவற்றுடன் அனைவரையும் உள்ளடக்கிய, வளமான, சமச்சீரான எதிர்காலத்தை உருவாக்குவதில் உலக அரங்கில் இந்தியா ஓர் உதாரணமாக விளங்குகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் இதுபோன்ற குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளின் சாராம்சம் என்பது அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதாகும். தற்போது உருவாகியுள்ள மாற்றத்தை உறுதி செய்து அடுத்து வரும் தலைமுறைகளிலும் தொடர ஒட்டுமொத்த தேசமும் ஒன்றுபட்டு அணிவகுக்க வேண்டும் என்பதற்கு மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஓர் அறைகூவலாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x