பாகிஸ்தானில் இருந்து துன்புறுத்தலுக்கு பயந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த இந்துவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து

பாகிஸ்தானில் இருந்து துன்புறுத்தலுக்கு பயந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த இந்துவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தானில் பிறந்தவர் ராஜ்குமார் மல்ஹோத்ரா. இந்து மதத்தைச் சேர்ந்த இவர் துன்புறுத்தலுக்கு பயந்து கடந்த 1992-ம் ஆண்டு தனது குடும்பத்துடன் இந்தியாவில் குடியேறினார்.

ஒரு நபர் 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தால் குடியுரிமை பெற முடியும் என்பதன் அடிப்படையில் 2017-ல் அவருக்கு இந்திய குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது.

இதனிடையே உறவினர்களுடன் சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்ட மல்ஹோத்ரா 2007-ல் ரூ.13.50 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தையும், 2012-ல் ரூ.19 லட்சம் மதிப்புள்ள மற்றொரு இடத்தையும் வாங்கினார்.

மல்ஹோத்ரா அந்த சொத்துகளை வாங்கும்போது பாகிஸ்தானியராக இருந்ததால், ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவில்லை என்று கூறி, அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் (பெமா) 7-வது விதியை மீறியதற்காக அமலாக்கத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், ரூ.3 லட்சம் அபராதமும் மல்ஹோத்ரா செலுத்தினார்.

இந்த விவகாரத்தில், அமலாக்கத் துறை மேல் முறையீடு செய்ததையடுத்து ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு மேலும் ரூ.4.5 லட்சம் அபராதம் விதித்து மேல் முறையீட்டு சிறப்பு இயக்குநர் உத்தரவிட்டார்.

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டு அதிருப்தியடைந்த மல்ஹோத்ரா மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுகினார். இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, சொத்துகளை வாங்கும்போது சட்ட நுணுக்கங்கள் தனக்கு தெரியாது என்றும், ஏற்கெனவே ரூ.3 லட்சத்தை அபராதமாக செலுத்தி விட்டதாகவும், தான் எந்தவித குற்றம் அல்லது சமூக விரோத செயல்களில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், “சட்டத்தை பற்றி தெரியாது என்று கூறி மனுதாரர் தற்காப்பு கோர முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நபரும் சட்டத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏற்கெனவே விதிக்கப்பட்ட ரூ.3 லட்சம் அபராதத்தை மல்ஹோத்ரா எந்தவித சர்ச்சையும் இல்லாமல் செலுத்தியுள்ளார். இந்த நிலையில், மேலும், ரூ.4.5 லட்சத்தை அபராதமாக விதித்ததை நியாயப்படுத்த முடியாது. இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in