காவிரி விவகாரம் | பெங்களூரு முழு அடைப்புக்கு போதிய ஆதரவு இல்லை: தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்
பெங்களூரு: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்ததை கண்டித்து பெங்களூருவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்களிடம் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. பேருந்துகள், ஆட்டோ, மெட்ரோ ரயில் உள்ளிட்டவை வழக்கம்போல இயங்கின.
தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து கர்நாடக அரசுதமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டது. இதனை கண்டித்து கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் மண்டியா, மைசூரு,பெங்களூரு ஆகிய இடங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக நீர் பாதுகாப்பு குழு தலைவர் குருபூர் சாந்தகுமார், ‘‘தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து செவ்வாய்க் கிழமை காலை 6 மணி முதல்மாலை 6 மணி வரை பெங்களூருவில் முழு அடைப்பு நடைபெறும்'' என அறிவித்தார். இந்த போராட்டத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு உட்பட 100-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
அதேவேளையில் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ், தனியார் வாகன உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தன்வீர் உள்ளிட்டோர் இதற்கு ஆதரவு அளிக்க மறுத்துவிட்டனர்.
இந்த போராட்டத்தால் பெங்களூருவில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அன்று நடைபெறுவதாக இருந்த காலாண்டு தேர்வுகள் வரும் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. கணிசமான கடைகளும், வணிக வளாகங்களும், திரையங்கங்களும் மூடப்பட்டன. சில தனியார் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை தங்களின் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டன.
அதேவேளையில் தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், உணவகங்கள் அரசு அலுவலகங்கள் ஆகியவை வழக்கம்போல இயங்கின. அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், ஆட்டோ, வாடகை கார், வேன், சரக்கு வாகனங்கள் வழக்கம்போல இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
இந்த போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும்தனியார் பேருந்துகள் அத்திப்பள்ளி சோதனை சாவடி வரை இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் சுமைகளை தூக்கிக்கொண்டு கர்நாடக எல்லைக்கு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
