சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு: மனைவி, மருமகள் சிறையில் சந்திப்பு

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

ராஜமுந்திரி: தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மற்றும் சிஐடி மேலும் 2 நாட்கள் விசாரணைக்கு கேட்ட வழக்கு நேற்று லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவற்றின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை சந்திரபாபு நாயுடுவை சிறையில் அவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

திறன் மேம்பாட்டு நிதி முறைகேடு வழக்கில் தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, ராஜமுந்திரி சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். இவருக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று, இவரின் ஜாமீன் மனு மீது விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

அதே சமயம், சந்திரபாபுவை மேலும் 2 நாட்கள் விசாரணை காவலில் அனுப்பும்படி சிஐடி போலீஸாரும் மனு தாக்கல் செய்தனர். இதனால் இவ்விரு மனுக்களில் எதனை முதலில் எடுத்துக்கொள்வது என்பது குறித்து இரு தரப்பு வழக்கறிஞர்கள் முதலில் வாதிட்டனர். விசாரணையின் முடிவில், சந்திரபாபுவின் ஜாமீன் மனு மீது இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஏற்கெனவே சிறையில் சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்திய அறிக்கையை சிஐடி போலீஸார் நேற்றுசீல் இட்ட கவர் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதே வேளையில், மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அவகாசம் வழங்க வேண்டுமெனவும் சிஐடி தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து மாலை வரை இரு தரப்பினரும் வாதாடினர். இறுதியில், ஜாமீன் மற்றும் சிஐடி காவல் நீட்டிப்பு குறித்து இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

பழிவாங்கும் நடவடிக்கை: நேற்று மாலை சந்திரபாபு நாயுடுவை அவரது மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராம்மனி, தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திரமாநில தலைவர் அச்சம் நாயுடு ஆகியோர் ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு சென்று சந்தித்து பேசினர். அப்போது சந்திரபாபு நாயுடு,‘‘யாரும் தைரியத்தை இழக்க வேண்டாம். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அரசியலில் பழிவாங்கவே ஜெகன் அரசு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. நான் தவறு செய்தேன் என நிரூபிப்பதற்கு ஜெகன் அரசு இதுவரை ஒரு ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க வில்லை. நீதி வெற்றி பெறும்” என கூறியதாக அச்சம் நாயுடு சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in