

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவ விழா கடந்த 18-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைய உள்ளது. இதில், 7-ம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில், உற்சவரான மலையப்பர், ராம, கிருஷ்ண, மலையப்பர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பிரம்மோற்சவத்தின் 7-ம் நாள், ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பகவான் வாகனத்தில் சூரிய நாராயணராக அந்த ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிந்தா...கோவிந்தா... எனும் கோஷம் சப்த கிரிகளிலும் ஒலிக்க பக்த கோடிகள் பக்தி பரவசத்தில் திளைத்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று மாலை ரங்கநாயக மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான தேவி,பூதேவி சமேதமாய் மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடந்தன. முதன்முறையாக உற்சவ மூர்த்திகளுக்கு கல் வைத்த மாலைகள், கிரீடங்கள், வளையல்கள் ஸ்னபன திருமஞ்சனத்தில் உபயோகப்படுத்தப் பட்டன. மேலும், முந்திரி, பாதாம்,பிஸ்தா, ரோஜா இதழ்கள் போன்றவையும் அலங்கார பொருட்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டன.
7-ம் நாள் பிரம்மோற்சவ விழாவில் மலையப்பர் சந்திரபிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை சந்திரனுக்கு உரிய திருத்தலம் என்பதாலும், சந்திரனின் பரிகார தலம் என்பதாலும் ஒவ்வொரு பிரம்மோற்சவ விழாவிலும், 7-ம் நாள் இரவு சந்திர பிரபையில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதேபோல் ஒவ்வொரு பவுர்ணமியன்று இரவும்உற்சவ மூர்த்தி கருட வாகனத்தில் மாட வீதிகளில் பவனி வந்து அருள்பாலிக்கிறார். மேலும், பிரம்மோற்சவ விழாவில் 3-ம் நாள் இரவு சந்திரனுக்குரிய முத்து பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
8-ம் நாள் பிரம்மோற்சவம்: திருமலையில் இன்று 8-ம் நாள் பிரம்மோற்சவ விழாவினையொட்டி, காலை 7 மணியளவில் தேர் திருவிழா நடைபெற உள்ளது.