மேரி மாதாவின் அருளால்தான் மகன் அனில் பாஜகவில் இணைந்தார்: ஏ.கே.அந்தோணியின் மனைவி தகவல்

பிரதமருடன் அனில்
பிரதமருடன் அனில்
Updated on
1 min read

ஆலப்புழா: காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, எலிசபெத் தம்பதிக்கு அனில், அஜித் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் அனில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜகவில் இணைந்தார்.

கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கிருபாசனம் மரியன் கத்தோலிக்க தேவாலயத்தில் ஏ.கே. அந்தோணியின் குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த தேவாலயத்தின் யூ டியூப் சேனலில் அந்தோணியின் மனைவி எலிசபெத் தனது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது மூத்த மகன் அனிலுக்கு இப்போது 39 வயதாகிறது. தந்தையை போன்று அரசியலில் ஈடுபட அவர் விரும்பினார். ஆனால் எனது கணவர் அந்தோணி, அனில் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. வாரிசு அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் தலைமை தீர்மானம் நிறைவேற்றியதால் எனதுமகனின் கனவு கேள்விக்குறியானது.

இந்த நேரத்தில் பாஜகவில் இணையுமாறு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனிலுக்கு அழைப்பு வந்தது. உடனே நான் தேவாலயத்துக்கு சென்று பாதிரியார் ஜோசபை சந்தித்து ஆலோசனை கேட்டேன்.

அப்போது அவர், ‘பாஜகவில் அனில் இணையக்கூடாது என பிரார்த்திக்க வேண்டாம். பாஜகவில் அனிலுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது' என்று கூறினார். இதன்பிறகு நான் பிரார்த்தனை செய்தபோது பாஜக மீதான வெறுப்புணர்வு மறைந்தது. மேரி மாதா எனக்கு புதிய இதயத்தை கொடுத்தார். மேரி மாதாவின் அருளால்தான் அனில் பாஜகவில் இணைந்தார். எனது மகன் பாஜகவில் இணைந்ததை ஏ.கே.அந்தோணி விரும்பவில்லை. எனவே அவரது மனமாற்றத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன். அந்த வேண்டுதலும் நிறைவேறியது. அனில் வீட்டுக்கு வந்தபோது எனது கணவர் நிதானத்துடன் செயல்பட்டார். வீட்டில் அரசியல் பேசக்கூடாது. குடும்பம் வேறு, அரசியல் வேறு என்று அவர் கூறினார். எனது கணவர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் மீண்டும் உறுப்பினராகி உள்ளார்.

ஏ.கே.அந்தோணிக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் நான் தேவாலயம் செல்வதையோ, பிரார்த்தனை செய்வதையோ தடுக்க மாட்டார். இவ்வாறு எலிசபெத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in