

பாலிவுட் நடிகை ஜியா கான் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜியா கானின் அம்மா ரபியா கான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பை போலீஸார் கூறுவதுபோல எனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் கொலைதான் செய்யப்பட்டாள். எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் ரபியா கான் கோரியிருந்தார்.
இதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ஜியா கான் மரணமடைந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. எனினும் மும்பை போலீஸின் சிறப்பு விசாரணைக்குழு நடத்திய விசாரணை குறித்து எந்த கருத்தையும் நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. மாநில அரசும், மும்பை போலீஸாரும் சிபிஐ விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜியா கான் (25) கடந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி மும்பையில் உள்ள தனது வீ்ட்டில் பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்திருந்தார்.
பிரபல திரை நட்சத்திர ஜோடிகளான ஆதித்யா பஞ்சோலி, சாரினா வஹாப் ஆகியோரின் மகனான நடிகர் சூரஜ் பஞ்சோலி (22), ஜியா கானுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். மரணமடைந்தவற்கு முன்பு ஜியா கான் கடைசியாக சூரஜ்ஜுடன்தான் பேசியுள்ளார். அவருடனான உறவு முறிந்ததால் ஜியா கான் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சூரஜ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.