

மது போதையில் இருந்த 47 வயது பெண், தனது தாயையும் சகோதரையும் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு டெல்லி டிஃபென்ஸ் காலனியில் உள்ள அவர்களின் வீட்டில் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறும்போது, ''சங்கீதா என்னும் டெல்லிப் பெண் தன்னிடமிருந்த உரிமம் பெற்ற பிஸ்டல் மூலம் தாய் கீதாவையும் சகோதரர் ஹர்சரணையும் சுட்டுள்ளார். மூவருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் முடிவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்'' என்றனர்.
டெல்லி (தெற்கு) டிசிபி ரோமில் பானியா கூறும்போது, ''நள்ளிரவு 12.43 மணியளவில் துப்பாக்கிச் சூட்டால் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளதாக அழைப்பு வந்தது. சம்பவ இடத்துக்கு போலீஸார் உடனே விரைந்தனர். அங்கே இருந்த ஹர்சரண், சங்கீதாதான் தங்களை நோக்கிச் சுட்டதாகத் தெரிவித்துள்ளார்.
காயமடைந்த இருவரும் எய்ம்ஸ் மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டனர். ஹர்சரண் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
சங்கீதா தற்போது காவலில் எடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரிடமிருந்த பிஸ்டல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.