Published : 23 Sep 2023 05:27 AM
Last Updated : 23 Sep 2023 05:27 AM
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளாக கருதப்படும் 5-ம் நாள் இரவு கருட சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
நேற்று காலை முதலே பக்தர்கள் திருமலைக்கு வர தொடங்கிவிட்டதால், திருப்பதி பஸ் நிலையம், ரயில் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்களே நிரம்பி இருந்தனர். மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க ஏற்கெனவே கடந்த 21-ம் தேதி மாலை 6 மணி முதல் இன்று 23ம் தேதி அதிகாலை 6 மணி வரை பைக்குகள் திருமலைக்கு வர தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் ஆந்திர அரசு பஸ்களிலும், ஜீப், கார்களிலும் வர தொடங்கினர். இதனால் காலை முதலே திருமலையில் கூட்டம் கூட தொடங்கிவிட்டது.
திருமலையில் உள்ள 4 மாடவீதிகளில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்து வாகன சேவையை கண்டு களிக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆதலால், நேற்று காலை நடைபெற்ற மோகினி அலங்கார வாகன சேவையின் போதே 4 மாட வீதிகளிலும் பக்தர்கள் நிரம்பி விட்டனர். நேற்று மதியம் 12 மணிக்கு மாட வீதிகளில் காத்திருந்த பக்தர்களுக்கு உணவு பொட்டலங்கள், குடிநீர், மோர் போன்றவை வழங்கப்பட்டன. பக்தர்களுக்கான வசதிகளை அவ்வப்போது தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
திருமலைக்கு வந்த திரளான பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இலவச அன்னபிரசாதமும் அன்னதான மையத்தில் வழங்கப்பட்டது. மாட வீதிகளில் 2.5 லட்சம் மோர் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. 747 துப்புரவு தொழிலாளிகள் நேற்று மாட வீதிகளில் பணியாற்றி உடனுக்குடன் குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்தனர். 1500 ஸ்ரீவாரி சேவகர்கள் மூலம் உணவுகள், குடிநீர் போன்றவை விநியோகம் செய்யப்பட்டன.
கருட சேவைக்கு 3,600 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 1,130 தேவஸ்தான கண்காணிப்பு ஊழியர்களும், 1,200 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். 2,770 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் நேற்று தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கருட சேவையை காண திருமலையில் முக்கியமான 20 இடங்களில் ராட்சத தொலைக்காட்சி பெட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆந்திர அரசு பஸ்கள் நேற்று மட்டும் திருப்பதி-திருமலை இடையே 3,000 டிரிப்கள் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT