திருப்பதியில் இன்று கருடசேவை - திருமலை வந்தடைந்த ஆண்டாள் சூடிய மாலை

திருப்பதியில் இன்று கருடசேவை - திருமலை வந்தடைந்த ஆண்டாள் சூடிய மாலை
Updated on
1 min read

திருமலை: திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் முன்னால் செல்ல, பல்வேறு மாநிலநடனக் கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடியவாறு சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பரும், ஸ்ரீ கிருஷ்ணரும் கோயில் முகப்பு கோபுர வாசலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பின்னர் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்துஅருள் பாலிப்பர். இதைத்தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதில் சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு தேவையான உணவு, நீர், பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. மேலும், கருட சேவையை முன்னிட்டு திருமலைக்கு பக்தர்கள் பைக்குகளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கருட சேவைக்குஉபயோகப்படுத்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மலர் மாலையும், கிளியும் நேற்று மதியம் திருமலை வந்தடைந்தன. இதனை தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் துணை ஆணையர் செல்லதுரை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் கொண்டு வந்து திருமலையில் பெரிய, சிறிய ஜீயர்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in