Published : 22 Sep 2023 05:48 AM
Last Updated : 22 Sep 2023 05:48 AM

எம்.பி.க்கள் குழுவுடன் ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்த சித்தராமையா: காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என தெரிவித்தனர்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது கர்நாடக‌ அணைகளில் போதிய நீர் இல்லாததால் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட இயலாது என தெரிவித்தார்.

காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதற்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக, மஜத உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவினருடன் சென்று டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேற்று சந்தித்துப் பேசினர்.

அப்போது டி.கே.சிவகுமார் "கர்நாடகாவில் பெய்த மழையின் அளவு, அணைகளின் நீர்மட்டம், இதுவரை தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறித்து விவரித்தார். மேலும் கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டங்களில் தமிழகத்துக்கு நீர் திறக்க இயலாது என நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களை வழங்கினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் தலையிட்டு கர்நாடகாவுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த சித்தராமையா, கர்நாடகாவில் பருவமழை பொய்த்ததால் அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. தற்போது அணைகளில் உள்ள நீரைக் கொண்டு கர்நாடகாவின் குடிநீர் மற்றும் சாகுபடிக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மதித்து, தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு திறக்க இயலாது என்று தெரிவித்தோம்.

எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர்கூறியுள்ளார். மேலும், கர்நாடகாவின் வறட்சி நிலையை கருத்தில்கொண்டு, உரிய நீர் பங்கீட்டு வரைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்'' என்றார்.

விவசாயிகள் போராட்டம்: இதனிடையே கர்நாடக மாநிலம் மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத்தினரும் காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்ற‌த்தின் உத்தரவை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x