“சாமானியர்களையும் அரசியலுக்கு வரத் தூண்டும்” - மகளிர் மசோதாவுக்கு தமன்னா பாராட்டு

“சாமானியர்களையும் அரசியலுக்கு வரத் தூண்டும்” - மகளிர் மசோதாவுக்கு தமன்னா பாராட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சிறப்பு அழைப்பாளராக வருகைபுரிந்த நடிகை தமன்னா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை பாராட்டி கருத்து தெரிவித்தார்.

கடந்த 18-ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது. மொத்தம் 5 நாட்கள் இந்த கூட்டத் தொடரானது நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட நடிகைகள் தமன்னா, திவ்யா தத்தா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கலந்துகொண்டனர். நாடாளுமன்ற கட்டிட்டத்தை பார்த்த பின்பு அவர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு வரவேற்று கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடிகை தமன்னா கூறுகையில், “இது ஒரு விழிப்புணர்வு என கருதுகிறேன். திரையுலகைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்குள் நுழைவது கடினம் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதா என்பது சாமானிய மக்களையும் அரசியலில் சேரத் தூண்டும்” என்றார்.

திவ்யா தத்தா கூறுகையில், “இந்த மசோதா மிக முக்கியமான முன்னேடுப்பு. இதன்மூலம் பெண்கள் முன்னிலைப்படுத்தபடுவார்கள். புதிய நாடாளுமன்றத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது சிறந்த அனுபவம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in