1996 முதல் 2023 வரை - மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் முழு ஆதரவுடன் நிறைவேறியது. எனினும், வரும் 2024 மக்களவை தேர்தலில் இது அமலுக்கு வராது. தேர்தலுக்குபிறகு, மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்து, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து, அதன்பிறகு நடக்கும் தேர்தலில்தான் அமலுக்கு வரும். மகளிர் மசோதா கடந்து வந்த பாதை:

1996: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முன்னணி (யுஏ) அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது. ஆனால், மக்களவையில் நிறைவேறாததால் தோல்வியுற்றது. இதைத் தொடர்ந்து, கீதா முகர்ஜி தலைமையிலான கூட்டு நாடாளுமன்றக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

1996: டிசம்பர் 9-ம் தேதி கீதா முகர்ஜி தலைமையிலான குழுவின் அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

1998: அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு மீண்டும் இந்த மசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால் தோல்வியுற்றது.

1999: இதைத் தொடர்ந்து, மீண்டும் இந்த மசோதாவை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகம் செய்தது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

2002: மக்களவையில் கூச்சல், குழப்பத்துக்கு இடையே மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் நிறைவேற்றப்படவில்லை.

2003: மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

2008: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ-1) அரசால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது.

2010: இந்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கலாகி நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இதனால் மசோதா இந்த முறையும் நிறைவேற்றப்படவில்லை.

2014, 2019: 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல் அறிக்கையில் மகளிர் மசோதாவை நிறைவேற்றுவோம் என பாஜக உறுதி அளித்திருந்தது.

2023: மக்களவையில் முழு ஆதரவுடன் மகளிர் மசோதா நிறைவேற்றம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in