எம்.பி.க்களிடம் வழங்கிய அரசியல் சாசன நகலில் ‘மதச்சார்பற்ற’, ‘சமதர்ம’ வார்த்தைகள் இல்லை: காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் குற்றச்சாட்டு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: புதிய நாடாளுமன்றத்தில் முதல் நாளில் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன நகலில் ‘மதச்சார்பற்ற’, ‘சமதர்ம’ என்ற வார்த்தைகள் இல்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. அதேநேரம் இது அசல் நகல் என பாஜக தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் பழைய கட்டிடத்தில் கடந்த 18-ம்தேதி தொடங்கியது. 2-ம் நாளான நேற்று முன்தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, எம்.பி.க்கள் அனைவருக்கும் அரசியல் சாசன நகல் வழங்கப்பட்டது. அதில் சில வார்த்தைகள் இல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன நகலில் ‘மதச்சார்பற்ற’ (செக்யூலர்), ‘சமதர்ம’ (சோஷலிஸ்ட்) என்ற வார்த்தைகள் புத்திசாலித்தனமாக நீக்கப்பட்டுள்ளன.

இது பாஜக அரசின் உள்நோக்கத்தை சந்தேகிக்கும் வகையில் உள்ளது. இது மிகவும் முக்கியமான விஷயம். இதுகுறித்து கேள்வி எழுப்புவோம். இப்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசன நகலைத்தான் வழங்கி இருக்க வேண்டும்” என்றார்.

இதுபோல, ‘மதச்சார்பற்ற’, ‘சமதர்ம’ என்ற வார்த்தைகள் அரசியல் சாசன நகலில் விடுபட்டிருப்பது குற்றம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த செயல் பாஜகவின் ஒருதலைபட்சமான மனநிலையை காட்டுவதாக உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறும்போது, “அரசியல் சாசனத்தின் அசல் நகல் உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன வரைவு தயாரிக்கப்பட்ட போது இப்படித்தான் இருந்தது. அதன் பிறகு அதில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில்தான் ‘மதச்சார்பற்ற’, ‘சமதர்ம’ என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. எனவே, உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நகலில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in