Published : 29 Jul 2014 03:08 PM
Last Updated : 29 Jul 2014 03:08 PM

வேளாண் உற்பத்தியை பெருக்க விஞ்ஞானிகள் முயற்சி அவசியம்: பிரதமர் மோடி

நாட்டில் வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளின் ஊதியம் உயரவும் வேளாண் விஞ்ஞானிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற 86-ஆவது இந்திய வேளாண் துறை ஆராய்ச்சி மைய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

"விவசாயிகளின் உழைப்பை நாம் என்றும் போற்ற வேண்டும். ஆனால், விவசாயிகளின் ஊதியம் என்பது குறைவாகவே உள்ளது. விவசாயத்தில் இலக்குடன் செயல்பட்டால் பெரிய இலக்குகளை அடைய முடியும்.

இதற்காக இரண்டு விஷயங்களில் நாம் கவனம் கொள்ள வேண்டும். ஒன்று நமது விவசாயிகளால், நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உலகிற்கும் உணவு உற்பத்தி செய்ய முடியும். மற்றொன்று, இதனால் விவசாயிகளின் வருவாய் உயரும். ஆனால், இதற்காக விவசாயிகள் தொழில்நுட்ப ரீதியில் உழைக்க வேண்டும். அவர்களுக்கு உதவ வேளாண் விஞ்ஞானிகள் முயற்சிக்க வேண்டும்.

விஞ்ஞானிகளின் ஆய்வு கூடங்களில், விளைநிலங்களில் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆராய்ச்சிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் மண் வளத்தை மேம்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு லாபம் அடைவதற்கு உதவ வேண்டியது விஞ்ஞானிகளின் கடமையாகும். விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும்.

உணவு பொருட்களின் தேவையை மனதில் கொண்டு, தரத்தில் ஈடு செய்யாமல் உற்பத்தியை குறுகிய காலத்தில் பெருக்க, விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி போல நீலப் புரட்சியும் தற்போது அவசியமானது. சர்வதேச அளவில் மீன் வளத்திற்கு அதிக வரவேற்பு உள்ளது. நாட்டின் கடல் வளத்தை உயர்த்தவும் விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.

சீனாவில் மூலிகை மருந்துகளின் ஆராய்ச்சிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்திய விஞ்ஞானிகளும் நமது பாரம்பரிய மூலிகை மருந்துகள் குறித்த ஆராய்ச்சிகளை விரிவுப்படுத்த வேண்டும்.

வானிலை சுழற்சியால் தண்ணீரை நாம் சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்காக மழை நீர் சேமிப்பு உள்ளிட்ட விஷயங்களை நடைமுறைப்படுத்த நாம் சிந்திக்க வேண்டும். இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம், தனது 86-ஆவது ஆண்டில் தற்போது உள்ளது.

இன்னும் 14 ஆண்டுகளில் நுற்றாண்டு விழாவை காண உள்ளது. அதற்குள் இந்த இலக்குகள் அனைத்தையும் நிறைவேற்றி சிறப்பான நுற்றாண்டை, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் காண வேண்டும் என்பதே நமது குறிக்கோள்" என்று மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x