மகளிர் மசோதா விவாதம் முதல் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ செப்.20, 2023
‘மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2024 தேர்தலில் அமல்படுத்துக’: மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு, வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதன் பிறகே இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த மசோதா குறைந்தபட்சம் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்தான் அமலுக்கு வரும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு: புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது மக்களவையில் புதன்கிழமை காலை விவாதம் தொடங்கியது. அதில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, "சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் ‘நாரி சக்தி வந்தன்’ மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
இந்த மசோதா நிறைவேறுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு நிறைவேற்றப்பட்டு 13 ஆண்டுகளாக இந்திய பெண்கள் காத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குக் காத்திருப்பது? இந்திய பெண்களை இவ்வாறு காத்திருக்க வைப்பது சரியா? இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்” என்று சோனியா காந்தி வலியுறுத்தினார்.
‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா’சலுகை அல்ல, உரிமை!: மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான மக்களவை விவாதத்தில் பேசிய திமுக எம்பி கனிமொழி, "இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம்; ஆதரிக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக பாஜக இதனை அரசியலாக்குகிறது. 13 ஆண்டுகளாக நாம் இது குறித்து பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சட்டமாக கொண்டுவரப்படவில்லை.
இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இந்த மசோதா பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை அல்ல. இது சலுகை என சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது பெண்களுக்கான உரிமை. ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படுவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று பேசினார்.
“தேர்தல் நேர வண்ணஜால முயற்சி மக்களுக்குப் புரியும்”: “பெரும்பான்மை பலம் இருந்தும் கடந்த 9 ஆண்டு காலமாகப் பாராமுகமாக இருந்துவிட்டு, தேர்தல் நேர வண்ணஜாலம் காட்டி ஏமாற்ற நினைக்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள்!” என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
“விலகப்போவதில்லை” - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திட்டவட்டம்: “தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன். எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்.9-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர்: "வருகின்ற அக்டோபர் 9-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற வளாகத்தின், பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூட இருக்கிறது" என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சீமான் மீதான வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு: ‘நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன்?’ என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
யுஜிசி பிரதிநிதியை நீக்கியது தமிழக அரசு: சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக ஆளுநர் அமைத்திருந்த 4 பேர் அடங்கிய குழுவிலிருந்து, யுஜிசி பிரதிநிதி ரத்தோரை நீக்கிவிட்டு, 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை: “கனடாவில் அதிகரித்து வரும் இந்திய விரோத செயல்கள் மற்றும் அரசே மன்னித்துவிட்ட வெறுப்புக் குற்றங்கள், கிரிமினல் வன்முறைகள் ஆகியனவற்றைக் கருத்திக் கொண்டு கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கிறோம்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப்சிங் நிஜார் கொலையில் இந்தியா மீது குற்றம் சுமத்திய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியிலுள்ள கனடா தூதரகத்தின் தலைமை அதிகாரியை உடனடியாக இந்தியாவிலிருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
