அரசியல் சாசன முன்னுரையில் ‘மதச்சார்பின்மை’, ‘சமதர்மம்’ சொற்கள் இல்லாதது ஏன்? - மத்திய சட்ட அமைச்சர் விளக்கம்

அர்ஜூன் ராம் மேக்வால் | கோப்புப் படம்
அர்ஜூன் ராம் மேக்வால் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிதாக வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளின் முன்னுரையில் மதச்சார்பின்மை, சமதர்மம் சொற்கள் இல்லாதது ஏன் என்பதற்கு மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் புகாருக்கு பதில் அளித்துள்ள அவர், "அரசியல் சாசனம் அமலுக்கு வந்தபோது அதில் மதச்சார்பின்மை, சமதர்மம் ஆகிய வார்த்தைகள் இல்லை. இந்த வார்த்தைகள் 1976-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42-வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டவை" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமையன்று எம்.பி.க்கள் அனைவருக்கும் புதிய நாடாளுமன்ற வளாக திறப்பை ஒட்டி ஒரு பரிசுப்பை வழங்கப்பட்டது. அதில் இந்திய அரசியல் சாசனத்தின் பிரதி, நாடாளுமன்றம் தொடர்பான புத்தகங்கள், நினைவு நாணயம் ஆகியன வழங்கப்பட்டன. பரிசாக வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் பிரதிகளின் முன்னுரையில் மதச்சார்பின்மை, சமதர்மம் சொற்கள் இல்லாததைக் கண்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன பிரதிகளின் முன்னுரையில் 'மதச்சார்பின்மை', 'சமதர்மம்' சொற்கள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இந்த இரண்டு வார்த்தைகளும் நீக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே கவலை அளிப்பதாக இருக்கிறது. இந்த இரண்டு வார்த்தைகளும் 1976-ல் சேர்க்கப்பட்டவை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அரசாங்கம் இந்த மாற்றத்தை தந்திரமாக மேற்கொண்டுள்ளது. அவர்களின் நோக்கம் பிரச்சினைக்குரியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப நினைத்தேன். ஆனால் எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை" என்று தெரிவித்துள்ளார். இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in