மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களை முட்டாளாக பார்க்கிறது - ஆம் ஆத்மி கட்சி பெண்கள் பிரிவு தலைவர் குற்றச்சாட்டு 

மகளிர் இடஒதுக்கீடு மசோதா பெண்களை முட்டாளாக பார்க்கிறது - ஆம் ஆத்மி கட்சி பெண்கள் பிரிவு தலைவர் குற்றச்சாட்டு 

Published on

பெங்களூரு: மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட நாரிசக்தி வந்தன் பில் அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெண்களை முட்டாளாகப் பார்க்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் கார்நாடகா மாநில பெண்கள் பிரிவு தலைவி குஷாலா ஸ்வாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண்களை முட்டாளாக்கப் பார்க்கும் மசோதா இது. இம்மசோதாவின் சரத்துக்களை கவனமாக படித்துப் பார்த்தால் பாஜகவின் மோசடி புரியும். நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், வரும் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெண்களுக்கு இந்த இடஒதுக்கீடு கிடைக்காது.

மறுவரையறை பணிகள் முடிந்த பின்னரே இந்த மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும். அதன் பின்னர் 15 வருடங்கள் அமலில் இருக்கும். பாஜகவுக்கு உண்மையிலேயே பெண்கள் மீது அக்கறை இருந்தால், மசோதாவில் இருக்கும் மறுவரையறை மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகிய சரத்துக்களை நீக்க வேண்டும்.

மக்களவைக்கான அடுத்த பொதுத்தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்றால் முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும். மறுசீரமைப்பின் அடிப்படையிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த எப்படியும் ஒருவருடமாகும். அதன் பின்னரே தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைத் தொடங்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் மசோதாவாக மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in