

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், நேற்று முன் தினம் திருமலையில் கோலாகலமாக தொடங்கியது.
நேற்று முன்தினம் மாலை கோயிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியேற்றம் சிறப்பாக நடந்தேறியது. பின்னர், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு சார்பில் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு ஆதி சேஷானாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தி பரவசத்தில் பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட உற்சவர்கள் 4 மாட வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை வாசுகியாககருதப்படும், சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். காளை, யானை, குதிரை ஆகிய பரிவட்டங்கள் முன்னால் செல்ல, ஜீயர் குழுவினர் நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களை பாட, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாட, அவர்களின் பின்னே உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்து சுவாமியை வழிபட்டனர். இரவு அன்ன வாகனத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேதமாய் மலையப்பர் எழுந்தருளி மாடவீதிகளில் காட்சியளித்தார்.