

ராய்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம் கோட்வாலி போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஜெகத்பூர் பகுதியில் ஆக்ஸிஸ் வங்கியின் கிளை அமைந்துள்ளது.
இந்த கிளையில் நேற்று காலை 9.30 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரொக்கம், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து ராய்கர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சதானந்த் குமார் கூறியதாவது: மொத்தம் 6 அல்லது 7 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்கு உள்ளேவந்துள்ளனர். வங்கி ஊழியர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய அவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.
பின்னர் வங்கி மேலாளரை, கத்தி போன்ற ஆயுதத்தால் பயங்கரமாகத் தாக்கி, அவரிடமிருந்த பெட்டகம், லாக்கர் அறையின் சாவியை பறித்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் உள்ளே சென்று ரொக்கம், தங்கக் கட்டிகள், நகைகளை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் மதிப்பு ரூ.8.5 கோடியாகும். காயமடைந்த வங்கி மேலாளர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
ரூ.7 கோடி ரொக்கம், ரூ.1.5கோடி மதிப்புள்ள தங்கக் கட்டி,நகைகள் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வங்கி மேலாளர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.