மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2029-ல் அமலாகும்

மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2029-ல் அமலாகும்
Updated on
1 min read

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரும் 2029-ம் ஆண்டில்தான் அமல் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் நாரி சக்தி வந்தன் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியதாவது: நாரி சக்தி வந்தன் மசோதா என்பது 128-வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகும். இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 சதவீத மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் நாரி சக்தி வந்தன் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

கடந்த 2021-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த கணக்கெடுப்பு காலதாமதமாகி வருகிறது. வரும் 2027-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.

புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும். இதன்படி வரும் 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மசோதா அமலுக்கு வரும். சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன்பிறகு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மசோதா கடந்து வந்த பாதை: கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது முதல்முறையாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் மசோதா தோல்வி அடைந்ததால் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.

1998-ல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு இல்லாததால் மசோதா காலாவதியானது. கடந்த 1999, 2002, 2003-ம் ஆண்டுகளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறாமல் போனது. கடந்த 2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்கள வையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.

சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in