

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2வது வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று (டிச.23 2017) தீர்ப்பளித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
பிஹார் முதல்வராக லாலு பிரசாத் பதவிவகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் லாலு ரூ.37.7 கோடி பணம் எடுத்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக, சிபிஐ லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதனால் அவரது அரசியல் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது. 11 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே ஒரே புகாரின் கீழ் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி லாலு பிரசாத் தரப்பில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. குற்ற நடைமுறைச் சட்டத்தின் படி, ஒரே குற்றத்திற்காக இருமுறை ஒருவர் மீது குற்றஞ்சாட்ட முடியாது என்று கூறி லாலு மீதான விசாரணையை நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுதாக்கல் செய்தது. அரசு கருவூலங்களில் இருந்து வெவ்வேறு காலங்கட்டங்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளன, இரண்டு தடவைகளிலும் நிதி நஷ்டம், பாதிக்கப்பட்ட நபர்கள், பயனடைந்த நபர்கள் வேறு வேறு என சிபிஐ வாதிட்டது. இதை ஏற்று மீண்டும் விசாரணையை தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 1991-94-ல் தியோகார் கரூவூலத்திலிருந்து ரூ.84.53 லட்சம் தொகையை எடுத்தது மற்றும் ஆவணங்களில் முறைகேடு செய்தது தொடர்பாக லாலு உள்ளிட்டோர் மீது தனித்த விசாரணை வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 2வது வழக்கில், பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவரை தவிர மேலும் 15 பேர் குற்றவாளி எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பிஹார் முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.