Published : 07 Dec 2017 10:11 AM
Last Updated : 07 Dec 2017 10:11 AM

போலீஸார் மீது கல் வீசி தேசிய அளவில் கவனம் பெற்றவர்: கால்பந்து அணி கேப்டனான காஷ்மீர் பெண்

காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீஸார் மீது கல்லெறிந்த இளம்பெண், இப்போது கால்பந்து அணியின் கேப்டனாக தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டர் புர்ஹான் வாணி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பிறகு மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சுமார் 6 மாதங்களுக்கு மேல் நடந்த போராட்டங்களின் போது போலீஸார் மீது இளைஞர்கள் (பெண்கள் உட்பட) கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் ஒரு வழியாக போராட்டங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

அவ்வாறு போலீஸார் மீது கல் வீச்சில் ஈடுபட்டவர்களில் ஒருவர்தான் அப்ஷன் ஆஷிக் (23) என்ற இளம்பெண். இவர் கல்வீசும் புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணைக்குப் பின்னர் இவர் ஒரு சிறந்த கால்பந்து வீராங்கனை என்பது தெரிய வந்தது.

ஆஷிக் இப்போது காஷ்மீர் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாகவும் கோல் கீப்பராகவும் உள்ளார். இந்த அணி தேசிய அளவில் சிறப்பாக விளையாடி வருகிறது. இவர் ஏற்கெனவே மும்பை கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், ஆஷிக், தனது அணியில் இடம்பெற்றுள்ள 22 வீராங்கனைகள், பயிற்சியாளர் சத்பால் சிங் கலா மற்றும் மேலாளர் செரிங் ஆங்மோ ஆகியோருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்தார்.

இதுகுறித்து ஆஷிக் கூறும்போது, “காஷ்மீர் இளம்பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். எங்கள் முன்னிலையிலேயே காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை தொலைபேசியில் அழைத்து, ஸ்ரீநகர் திரும்பியதும் எங்களை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அதேநேரம், மெகபூபா முப்தி ஏற்கெனவே எங்கள் அணியினருக்கு எல்லா வசதிகளையும் செய்து தந்துள்ளார்” என்றார்.

கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து வருத்தப்படுகிறீர்களா என்று செய்தியாளர்கள் ஆஷிக்கிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறும்போது, “நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை. கடந்த ஆண்டு போராட்டம் நடைபெற்றபோது கால்பந்து மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது சக வீராங்கனை ஒருவரை போலீஸார் அடித்துவிட்டனர்.

மேலும் போலீஸார் எங்களை தரக்குறைவாக பேசினர். அதனால் கோபத்தில் கல் வீசினேன். போலீஸார் அவ்வாறு நடக்காதிருந்தால் நான் கல்வீச்சில் ஈடுபட்டிருக்க மாட்டேன். இப்போது கேப்டனாக எனக்குள்ள பெயரை காப்பாற்றும் நிலையில் இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x