உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி எது?: அக்.6-ல் தேர்தல் ஆணையம் விசாரணை

உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி எது?: அக்.6-ல் தேர்தல் ஆணையம் விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி எது என்பது குறித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் ஆணையம் (இசிஐ) விசாரிக்கவுள்ளது.

நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் சரத் பவார். மகாராஷ்டிர முதல்வராக பல முறை பதவி வகித்த அவர், பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி கட்சியை உடைத்தார். மேலும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவார் மற்றும் அஜித் பவார் இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இருதரப்பிலும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றுக்கு உரிமைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வரும் அக்டோபர் 6-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய தினம் இருதரப்பிலும் இருந்து கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க சரத் பவார், அஜித் பவாருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இரு தரப்பிலும் இருந்து வழங்கப்படும் முழுமையான பிரமாண பத்திரத்தின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

இதுகுறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் கூறும்போது ‘‘எல்லோருக்கும் அவர்களுடைய தரப்பு வாதங்களை முன்னெடுத்து வைக்க உரிமை உள்ளது. அதன் அடிப்படையில் நாங்கள் எங்களுடைய தரப்பு வாதத்தை தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் எடுத்து வைப்போம்'' என்று தெரிவித்தார்.

சரத் பவார் கூறும்போது, “நாங்கள் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் தருவோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in