ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க இயலாது: மத்திய அரசுக்கு சித்தராமையா கடிதம்

சித்தராமையா | கோப்புப்படம்
சித்தராமையா | கோப்புப்படம்
Updated on
1 min read

பெங்களூரு: டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்தது. முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடகாவுக்கு இதையே உத்தரவாக பிறப்பித்தது.

இதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ''செப்டம்பர் 12-ம் தேதிக்கு பின்னர் தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது'' என தெரிவித்தது. நேற்று முன்தினம் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங்ஷெகாவத்துக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ''கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளும் முழு கொள்ளளவை எட்டவில்லை.

கடந்த 1.6.2023 முதல் 11.9.2023 வரை 4 அணைகளுக்கும் 104.27 டிஎம்சி அளவு நீர் மட்டுமே வந்துள்ளது. அதே காலகட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக இந்த அணைகளுக்கு 228 டிஎம்சி நீர் வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு 53 சதவீதம்‌ குறைவான நீர் வந்துள்ளது.

கர்நாடகாவில் குடிநீர் தேவைக்கு 33 டிஎம்சி, சாகுபடிக்கு 70.20 டிஎம்சி, இதர தேவைக்கு 3 டிஎம்சி என மொத்தமாக 106.21 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. ஆனால் செப்டம்பர் 12-ம் தேதி நிலவரப்படி 4 அணைகளிலும் 53.28 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது.

அதே வேளையில் தமிழக அணைகளில் இதனைவிட கூடுதலான அளவில் நீர் உள்ளது. கர்நாடகாவில் குடிநீர் மற்றும் சாகுபடிக்கு தேவையான நீர் இல்லாதபோது, தமிழகத்துக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிட இயலாது. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மறுபரிசீலணை செய்ய உத்தரவிட வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கர்நாடகாவில் விவசாய மற்றும் கன்னட‌ அமைப்பினர் மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழக அரசை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மண்டி யாவில் விவசாய சங்கத்தினர் சாலையில் டயர்களை எரித்தும், காவிரி ஆற்றில் இறங்கியும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த விவசாயிகளை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in